பண்டையக் காலங்களில் இருந்தே மக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு முயற்சியே கடிதமாகும். தொலைபேசி இ-மெயில் போன்றவை நவீன காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டாலும் தகவல் பரிமாற்ற வீச்சை அதிகரிப்பது கடிதம் என்றே கூறலாம்.
நட்புகளுடன் வட்டார வழக்குப் பேச்சில் எழுதப்படும் கடிதங்கள் உயிர் பெற்றவைகளே. உறவுகளுக்கு நலம் விசாரிப்புகளுடன் விரியும் கடிதங்கள் அன்பினைக் காலதேசங்கள் தாண்டிக் கொண்டு சென்றவையே. கடிதக் காகிதத்தில் எந்த இடத்தையும் வீணாக்காமல் அவர்கள் கொடுத்த வரைமுறையை மீறாமல் கோடு போடாமலேயே எழுத்துக்கள் நேராகக் கோடு போல் அமைவது என்பதெல்லாம் ஒரு கலையே.
கருவிகள் அழியலாம். கலையும் உணர்வும் அழியலாமா? அன்பும் அறிவும் எப்போதும் பரிமாறப்பட வேண்டியவை அன்றோ? எனவேதான் இச்சிறு முயற்சி. எழுத்தாளர்களின் அன்பும், கருத்துகளும், அறச்சீற்றங்களும் கடிதங்களாக இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. சக்தி உருவாவதுமில்லை, அழிவதுமில்லை. உருவம் மாறுகிறது, அவ்வளவே.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.