செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி அந்தப் பத்தினியின் திருவுருவைப் பிரதிட்டை செய்தான். அதனை அடுத்து இளங்கோவடிகள் இந்தக் காவியத்தை இயற்றினார். செங்குட்டுவன் அமைத்த கற்கோயில் இப்போது இருக்கிற இடம் தெரியவில்லை. ஆனால் இளங்கோவடிகள் இயற்றிய சொற் கோயிலாகிய சிலப்பதிகாரக் காப்பியம் இன்றும் மெருகழியாமல், அழகு குலையாமல் தமிழர்களுக்கு இலக்கிய விருந்தாய் நிலவுகிறது.