எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலை தரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. சங்கநூற் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம். புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களும், தகடூர் யாத்திரைப் பாடல்களும், கொங்குமண்டல சதகப் பாடலும் இந்த வரலாற்றையறியத் துணையாக இருந்தன. அன்றியும் அதிகமான் கோட்டையின் இரகசியத்தைச் சேரனுக்கு ஒரு வஞ்சகமகள் அறிவித்தாள் என்ற செய்தி அதிகமான் வாழ்ந்த தருமபுரிப் பக்கத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவருகிறது. அதையும் பயன்படுத்திக் கொண்டேன்.
ஆராய்ச்சி முறையில் எழுதியதன்று இது. படிப்பவர்கள் நெஞ்சில் அதிகமான் உருவமும் செயல்களும் ஒவியமாக நிற்கவேண்டும் என்ற கருத்தோடு உரையாடல்களையும் வருணனைகளையும் இணைத்து எழுதினேன்.