இந்த நாவலை வாசிக்கும் பெண்களுக்கு சேகரைப் போல ஒரு தோழமை கிடைக்காதா என்கிற ஏக்கமும், ஆண்களுக்கு நிவேதிதாவைப் போல ஒரு தோழமை கிடைக்காதா என்கிற ஏக்கமும் ஏற்படப் போவதென்பது உறுதி. நிவேதிதாவின் கணவன் மற்றும் அந்த வீட்டில் இருக்கிற ஆயா கதாபாத்திரங்கள் இன்னும் கதையில் நேரடியாக வராமல் மட்டுமே பேசப்படுகிற சில கதாபாத்திரங்கள் உட்பட கச்சிதமான வார்ப்பு.
இறுதிக்காட்சியில் நாவலாசிரியர் எல்லோர் இதயத்தையும் உணர்வின் கதகதப்பினால் உருகச் செய்து விடுகிறார். இந்த நாவலை இத்தனை சீக்கிரம் முடிக்காமல், இன்னும் விஸ்தரித்து எழுதியிருக்கக் கூடாதா என்கிற எண்ணம் இதன் நிறைவுப் பகுதியை படிக்கையில் ஏற்படுவது இந்த நாவலின் சிறப்பு.
காதலுக்காக எழுப்பப்பட்டிருக்கும் உலக அதிசயம் தாஜ்மஹால். நட்புக்காக எழுப்பப்பட்டிருக்கும் உலக அதிசயம் நிவேதிதா ஒரு புதுமலர்.
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.