மன்னை பாசந்தி: இயற்பெயர் மன்னார்குடி பார்த்தசாரதி சந்தானம். மன்னை பாசந்தி அவர்கள் தமிழ் இலக்கியத்தில் கதை கவிதை கட்டுரை என பன்முகப் படைப்பாக ‘முக்கனி’ என்னும் நூலை படைத்த தமிழ்த் தோன்றல். சிறந்த ஹைக்கூ (துளிப்பா) கவிஞர். துளித்துளி நிலா – மின்னல் துளிப்பா - சிறுதுளியில் சிகரம் மூன்று துளிப்பா நூல்களை வெளியிட்டு ஹாட்ரிக் விருது பெற்ற சாதனையாளர் ஆன்மிகம் மற்றும் இலக்கியத்தில் பல படைப்புகள் படைத்து இருபத்தைந்து விருதுகளுக்கும் மேல் பெற்றுள்ளார். குறிப்பாக இலக்கியமாமணி - இன்னிசைக்கவிஞர் - ஆன்மிக அருள்நிதி – தமிழ்த்தோன்றல் - சிறந்த எழுத்தாளர் - மனிதநேயப் பண்பாளர் - மனிதநேயச்செல்வர்- நற்கருணைமாமணி - நாநயமாமணி போன்றதான எண்ணற்ற விருதுகளைப் பல்வேறு அமைப்புகளின் மூலம் விருது பெற்று பாராட்டப்பட்டவர்.
எண்ணலங்காரம் எழுத்தலங்காரம் இரண்டிலும் திறமைசாலி. நன்னூல் படைப்பாளர். சென்னை மயிலை ஸ்ரீராமகிருஷ்ண மாணவரில்லத்தில் பயின்றவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். திருக்கோயில்கள் சென்று சுயமாகவே ஆன்மிகப் பாடல்கள் இயற்றும் சக்தி பெற்றவர். இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது திருக்கோயில் தரிசனம் மற்றும் மனங்கவர் பாடல்கள் இதனை வெளிக்காட்டும். சங்கீத மகான்கள் - எண்கள் - அம்மன்கள் - ஆழ்வார்கள் - நாயன்மார்கள் - நவக்கிரகங்கள் - தமிழ் மாதங்கள் - நட்சத்திரங்கள் போன்றதான தலைப்பில் நூற்றியெட்டு மூவரித் தொகுப்பு இவரது தனிச்சிறப்பு. இவருக்கென்று வாசகர் வட்டம் தனியாக உண்டு. இவரது படைப்புகள் பறைசாற்றும். தற்போது முழுநேரப் பணியாக நூல்கள் வெளியிடுவது இவரது தலையாயப் பணியாகும்.