இலட்சியத்துடன் பேனாபிடிக்க வந்த எனது இந்த நிலை பிற கூலி எழுத்தாளர்களைக் கொண்டும், அதுவும் பெண் எழுத்தாளர்களையும், பெண்வேடம் புனைந்த எழுத்தாளர்களையும் படையாகக் கொண்டு முறியடித்து விடலாம் என்று ‘மொட்டை’க் கனவு காணும் கூட்டத்தில் ஒருவராக எனது ஒரு காலத்து நண்பர் மணியன் இடைக்காலத்தில் இழிந்து போனார்.
எந்தக் கடையனையும் நான் எனது பகைவனாய்க் கருதுவதில்லை. அவர்களை நான் எவ்வளவு தூரத்தில் விலக்கி வைத்தாலும், முகலோபனம்கூட அற்றிருக்கும்போது முரட்டுத்தனமாக வைதாலும் – ‘அவர்கள் என்னை, நண்பனாகக் கருதி அணுகினால், சென்றதை மறந்து’ ‘இன்று புதிதாக்கலாம் இந்த நட்பை’ என்று என் மனம் கனிந்துவிடுகிறது. இது எனது இயல்பு அல்ல; அது என் மனத்தின் இயல்பே ஆயிற்று. அப்படியொரு கனிவில் எழுதப்பட்ட கதை இந்தக் ‘கரிக்கோடுகள்.’ இந்தக் கதையின் ‘தீம்’, பாத்திரங்கள் எல்லாமே - எனக்கும் தற்கால இலக்கியச் சீரழிப்புக் கும்பலுக்கும் நடுவே நிகழும் நாகரிகமான யுத்தத்தின் உருவகமாகத் தெரிகிறது. இதில் வெற்றிகளைக் குவிப்பதைவிட, சமாதானமான சாதனைகளையே நான் ஆக்கப்பூர்வமானது என்று நம்புகிறேன். ஏனெனில் நான் படைப்பாளி. எனது கோபம்கூட ஆக்கும்; அழிக்காது என்பதற்கு அடையாளம் இந்தக் கரிக்கோடுகள்.