‘கை’ என்பதற்கு ஒழுக்கம் என்று அர்த்தம். ஐந்து நிலங்களிலும் கூறப்பட்டுள்ள ஒழுக்கத்தை இந்த நூல் கூறுவதால் இதற்கு ‘கைந்நிலை’ என்று பெயர். இந்த நூலில் ஒரு திணைக்கு 12 பாடல்கள் என்று ஐந்து திணைகளுக்கும் 60 பாடல்களை இந்த நூல் கொண்டுள்ளது.
இந்த நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல் என்ற வரிசையில் திணைகள் அமைந்துள்ளது. இந்த நூலை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க்காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பவர். இந்த நூலின் ஆசிரி யரின் இயற்பெயர் புல்லங்காடனார் என்று தெரிகிறது. காவிதியார் என்பது நூலாசிரியரின் தந்தை பெயர். மாறோக்கம் என்பது கொற்கையை அடுத்துள்ள ஒரு ஊராகும்.
இதன் மூலம் இந்த நூலாசிரியர் கொற்கையை அடுத்திருக்கும் முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நூலில் உள்ள சில செய்யுள்களை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரனார் போன்றவர்கள் எடுத்தாண்டு இருப்பதிலிருந்து இந்த நூலின் சிறப்பை அறியலாம்.