'இதயம் பேசுகிறது' வார இதழில் என்னை ஒரு தொடர் கதை எழுதுமாறு கேட்டபோது இதைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கதை எழுத எண்ணினேன். மதமாற்றம் நடைபெற்ற ஊர்களுக்குச் சென்று மதம் மாறியவர்கள் பலரைச் சந்தித்தேன். ஒன்று புரிந்தது! இந்த மக்கள் தமது தேங்கிப்போன வாழ்க்கையில் ஒரு அடிப்படை மாற்றத்தை விழைகிறார்கள். அதற்கான பொருளாதார சமூக நியாயங்கள் நிறையவே இருக்கின்றன என்பதுதான் அது.
மக்கள் காண விரும்பும் மாற்றம் மெய்யாக சமூக பொருளாதார மாற்றமாகிவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிற சுரண்டும் கூட்டத்தினர் - அவர்கள் இந்து மத, மட அபிமானிகளாகவும், இஸ்லாமிய அராபிய பெட்ரோ டாலர் அபிமானிகளாகவும், கிறித்துவ ஆங்கிலோ அமெரிக்க ஐரோப்பிய அபிமானிகளாகவும் உள்ள - பணம் படைத்தவர்கள் திட்டமிட்டு நடத்திச் செய்தி பரப்பி, மக்களது மாற்றம் காணும் விழைவைத் திசை திருப்பி, வகுப்புக் கலவரமாக்கி விடுகிற காரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது தெளிவு.
இவ்விதம் நாமறிவது புதிதல்ல. மக்களைச் சார்ந்த மதங்களை மன்னரும் ஆளும் வர்க்கத்தினரும் கைப்பற்றிக் கொண்டு மதச்சண்டைகளை நடத்தியதே மதங்களின் வரலாறு. அதுபோலவே இக்கால ஜனநாயக உரிமைகளின் பேரால் அன்னியர்களின் தலையீட்டுடன் இத்தகு மதக்கலவரங்கள் உற்சாகமாய்த் தூண்டப்படுகின்றன. இதில் ஒன்றுமறியா மனிதாபிமானிகளும் சிக்கி விடுகின்றனர்.
உழைக்கும் மக்களின், பெண் மக்களின் அவல நிலையையும் அடிமைத்தனத்தையும் அகற்றித் தீர்க்கிற உண்மையான மார்க்கம் எதையும் இதுகாறும் நமது தொன்மை மதங்கள் எதுவும் காட்டவில்லை. மேலும் உழைக்கும் மக்களின் நலன்களையும், பெண் மக்களின் மேன்மைகளையும் சிதைப்பதற்கும் சீரழிப்பதற்கும் உலகில் உள்ள எல்லா மதங்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இத்தகைய அவலங்களைக் குறித்துக் கண்மூடிக் கிடக்கும் இந்த மதங்களாலேயே இந்திய வாழ்க்கையில் மாற்றங்கள் காண முடியும் என்று நம்பிய ஞானிகள் பலர். அவர்களில் நாமறிந்த நம் காலத்திய ஞானி மகாத்மா காந்தியடிகள். அவரது வழியில் இதற்குத் தீர்வுகாண முயலும் ஆதி இந்த நாவலுக்காக மட்டும் பிறந்தவர் அல்ல.
ஜய ஜய சங்கர நாவல் தொடங்கி இன்னும் பிற படைப்புகளிலும் ஆதி என்கிற இந்தப் பாத்திரம் இடையறாது தோன்றி காந்திய அணுகல் முறையை சிபாரிசு செய்தே வருகிறார்.
அத்தகு பார்வையில் நமது மதங்களுக்கிடையே இசைவும், சமுதாயத்தில் பொருளாதார சமத்துவமும் நிகழ காந்திய வாழ்வியல் முறைகளை மீண்டும் ஒரு முறை சித்த உறுதியுடன் நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தில் விளைந்த கதை இது.
- த. ஜெயகாந்தன்