எனது கதைகளை அவர்கள் திருப்பித் தருவது உண்டு. எனக்கு அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்கள் அதனைப் பிரசுரிப்பதுதான் எனக்கு ஆச்சரியம். என் கதைகளில் ஆட்சேபகரமான பகுதி என்று அவர்கள் கருதுகிறவற்றைப் பிடிவாதமாக அவர்கள் தலையில் நான் கட்ட முயலுவதே இல்லை. வாசகர்கள் கண்டனம் தெரிவித்த பிறகு அவர்கள் வருத்தம் தெரிவிப்பது உண்டு. எனக்கு அதில் வருத்தமில்லை. அவர்கள் நிலையை நான் புரிந்து கொள்ளுகிறேன்.
என் கதைகளைக் குறைத்தோ சிதைத்தோ வெளியிட அவர்களுக்கு உரிமையுண்டு என்பதை நானறிவேன். ஆனால் அந்த உரிமையை அவர்கள் பயன்படுத்தாத அளவுக்கு அப்படி ஓர் அவசியம் நேர்ந்தால் நானே கண்ணை மூடிக்கொண்டு வெட்டிக் குறைத்துக் கொடுப்பேன். அப்போது அவர்களே பதறுவார்கள் : “சார் சார்—அந்தப் பகுதியை எடுக்காதீர்கள்” என்பார்கள். எனக்கு அதில் மகிழ்ச்சி
நான் என் கதைகளுக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று எவரிடத்தும் கேட்டதில்லை. ஏனெனில் பேரம்பேச அவர்கள் தருவது கதைக்கு விலை அல்ல; கேட்டுப்பெற அது கூலியும் அல்ல; அவர்களிடம் உரிமைப்போர் நடத்த நான் அவர்களிடம் வேலை செய்யும் கூலிக்காரனும் அல்ல; அவர்கள் எனக்கு எஜமானர்களும் அல்ல. புகாருக்கோ, முறையிடலுக்கோ ஆள் சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வ தற்கோ நான் வெட்கப்படுகிறேன். எனது உரிமைகளுக்காக நான் போராட வேண்டிய அவசியம் எனக்கோ பிறருக்கோ இல்லை. எனது உரிமைகளை எவரும் பறிக்க இயலாது ; பறிக்கவும் விடமாட்டேன், என்னைப் பொறுத்தவரை எவரிடத்தும் போரிட எனக்கு நியாயம் இல்லை. அதெல்லாம் எனது நாகரிகத்துக்குப் பொருந்தாது; அதன் விளைவுகள் இவை.
இது compromise அல்ல; அது அடிபணிவு அல்ல ; இதுதான் என் சுயமரியாதை.
நான் வாழ்க்கை வசதியோடு இருந்திருந்தால்— சர்க்கார் இலாகாவில் உத்தியோகத்தில் இருந்தால்—அப்போதும் எழுதுவேன்—இந்தப் பத்திரிகைகளுக்கு ஒரு போதும் நான் எழுதமாட்டேன். புனை பெயரிலும், பெண்டாட்டியின் பெயரில் ஒளிந்து கொண்டும், மேலதிகாரிகள் உத்தரவு பெற்ற தயவிலும் இந்தப் பத்திரிகைகளுக்கு எழுதுவது ஓர் இலக்கியப் பணி என்று கருத மாட்டேன். எழுதுவதற்குப் பணம் வாங்குவது அப்போது அதர்மமாகக்கூட எனக்குப்படும். ஏனெனில் எவர் கட்டளைக்கும் உட்பட்டு யாருடைய தேவைக்காகவும் என்னால் எழுத முடியாது. என் சொந்த தர்மத்துக்காகவே நான் எழுதுகிறேன். எனது எழுத்தைப் பிரசுரித்து எனக்கு மரியாதை செய்பவர்களிடம் நான் சச்சர விடுவது அநாகரிகம்.
எனது கதைகளை வெளியிடும் பத்திரிகைக் காரர்களின் கொள்கைகள், காரியங்கள் ஆகியவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை ; பொறுப்புமில்லை. நான் எழுதுகிற எழுத்துக்களுக்கு மட்டுமே நான் பொறுப்பு. அதில் அவர்கள் திருத்தங்கள் செய்கிற பட்சத்தில், குறைத்துச் சிதைக்கிற பட்சத்தில், நான் அதிகபட்சம் செய்யக்கூடியது ஒரு good bye சொல்வதுதான்.
சம்பந்தமே இல்லாத இடத்தில் சண்டை என்ன வேண்டிக் கிடக்கிறது!
எனக்கும் நான் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கும் உறவு நீடிப்பதன் ரகசியமே இது தான். இது ஒரு பற்றற்ற உறவு; பந்தமற்ற நட்பு.
என் எழுத்தை வாசகர்களுக்குக் கொண்டு தருகிறவர்கள் அவர்கள். அதிலே அவர்கள் பெருமையும் அடைகிறார்கள். ஏதோ நான் “பெரிய எழுத்தாள”னாக மாறிய பிறகு இந்த நிலை என்று நினைக்க வேண்டாம். நான் எப் போதுமே பெரிய எழுத்தாளன் தான். ஆரம்பத்திலே இருந்தே இப்படித்தான் நான் இருந்திருக்கிறேன். முதிர்ச்சியற்ற வயதாலும் முரட்டுத்தனமான குணத்தாலும் நான் பத்திரிகைக்காரர்களிடம் முஷ்டி மடக்கி நேரடியாகச் சண்டை போட்டதும்கூட உண்டு. ஆனாலும் அது இலக்கிய விவகாரம் என்று நான் துணியமாட்டேன்.
- த. ஜெயகாந்தன்