அவனின் தன்னம்பிக்கை இதனை வாசிக்கும் அத்தனை மனதிற்குள்ளும் நிரந்தரச் சிம்மாசனமிட்டுக் கொள்ளும். அவன் கற்றுத் தரும் அந்தத் தன்னம்பிக்கை, உறவுகளில் தலையாய உறவாய் நம்மோடு உறவாடி எட்டமுடியாததை எட்ட வைக்கும். சோர்ந்து, தளர்ந்து போகையில் ஊட்டச்சக்தியாக இயங்கி அதனைத் துரத்தும். சோம்பலாகிறபோது சுறுசுறுப்பாக்கும். வாழ்வின் சூட்சுமம் புரிய வைத்து முன்னோக்கிய சிந்தனை விதைக்கும். இந்தக் கதையை உருவாக்கியது இதன் நாயகனான டாம் ஹேங்க்ஸ். வில்லியம் ப்ராய்ல்ஸ் ஜுனியர் திரைக்கதை அமைத்தார். ராபர்ட் ஜிமெக்கிஸ் இயக்கினார். டாம் ஹேங்க்ஸ் நடித்து இரண்டாயிரமாவது வருடம் வெளிவந்த “காஸ்ட் அவே” என்கிற ஆங்கிலத் திரைக்கதையை அடியற்றி எழுதப்பட்டது தான் இந்த நாவல்.
இந்த நாவல் எழுதுவதற்கான பிரத்யேகக் காரணம் உண்டு. தன் கையே தனக்குதவி என்று முன்னோர் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதன் தத்துவார்த்த உண்மையை இந்த “சக் நோலன்” கதாபாத்திரம் வாழ்ந்து காட்டியிருக்கிறது. அதற்காகவே அவருக்கு அந்த ஆண்டிற்கான “கோல்டன் குளோப்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதைக்குள் பல புதுமைகள் புதைந்திருக்கின்றன. யதார்த்தத்தளத்தில் உருவாக்கப்பட்ட அற்புதமான படைப்பு இது. சக் நோலன் கதாபாத்திரம் தன்னம்பிக்கையின் உருவகம். தனிமை பற்றி இந்த நாவல் நிறையவே உணர்த்துகிறது. கற்றும் தருகிறது. அதன் அப்பழுக்கற்ற புனிதத்தை ஒரு புள்ளியில் தொட்டும் விடுகிறது.
தனிமையில் இருப்பவர்களுக்கு மிகச் சிறந்த நண்பன் தரமான நூல்கள் என்பார்கள். இங்கே சக் நோலனுக்கு அவனின் அந்தகாரத் தனிமையே உற்ற நண்பனாகி விடுகிறது. அந்தத் தனிமை அவனுக்குள் எவ்வளவோ கற்றுத் தருகின்றன. வலிகளைத் தாங்கக் கற்றுத் தருகிறது. தற்காத்துக் கொள்ளக் கற்றுத் தருகிறது. போராட கற்றுத் தருகிறது. துணிச்சல் கற்றுத் தருகிறது. முத்தாய்ப்பாய்த் தன்னம்பிக்கையைக் கற்றுத் தருகிறது. இந்த நாவலைப் படிக்கையில் அதனை முழுமையாய் உணர முடியும்.
சிறுபிராயத்தில் தனியாக இருப்பதற்கோ, இருட்டிற்குள் செல்வதற்கோ விரும்புவதில்லை. ஆனால் துவக்கப் புள்ளியிலேயே கருவறையில் இருள் மண்டிய பிராந்தியத்தில் இருந்திருக்கிறோம். தனியே... மிகமிகத் தனிமையில் இருந்திருக்கிறோம். எல்லோருக்குள்ளும் ஒரு “நார்சிஸிஸ்ட்” இருக்கக்கூடும். தன்னைத் தானே நேசிப்பவரை அப்படிச் சொல்வதுண்டு. நம்மை நாமே நேசிக்காதவர் யார் தான் இல்லை... அப்படித் தன்னோடு, தன்னோடு மட்டுமே உறவாடி வாழ நேர்ந்த ஒரு அற்புத மனிதனின் தன்னம்பிக்கை மிக்க வாழ்வு வாழ்வின் சரித்திரமாய் இங்கே பதிவாகியிருக்கிறது.
எனினும் நாம் யாவரும் தனியாகத் தான் வருகிறோம். தனியாகத் தான் போயும் கொண்டிருக்கிறோம். தனிமை மட்டுமே நமக்கான தேடலின் சாசுவதமாய் இருக்கிறது. ஒருவர் ஒருவர் மாதிரி இருப்பதில்லை. எல்லாம் தனித்தனி தான்.
இதை உணர்ந்ததாலேயே புத்தர் அத்தனையையும் விட்டுவிட்டுப் போதிமரம் போய் தன்னுள் பயணித்து தன்னைத் தேடிக் கண்டுபிடித்து தன்னிலிருந்து அத்தனையையும் உணர்ந்து தன்னையுணர்ந்த தன்னையே தனக்கான துணையாக்கிக்கொண்டாரா? அதுமட்டுமே அவரது வாழ்க்கையின் சேதியாகவும் தந்துவிட்டுச் சென்றாரோ?
சக் நோலன் ஒரு எளிமையான மனிதன். அபாரமான மனிதநேயவாதி. ரொம்ப எளிமையான வாழ்வை வாழத்தான் நினைத்தான். ஆனால் சூழ்நிலை அவனை ஒரு சரித்திர புருஷனாக ஆக்கிப் பார்க்க அல்லவா தீர்மானித்திருந்தது.
தனிமை அவனுக்குள் திணிக்கப்பட்டது. அவன் அதை வேதமாக்கினான். தன்னையே நண்பனாக்கித் துணைக்கு வைத்துக்கொண்டு அவனின் உலகை விசாலமாக்கினான். அது வாழ்வின் சூட்சுமத்தை அவனுக்குக் கிரீடமாய்ச் சூட்டி விட்டுச் சென்றது. இதனை வாசிக்கும் அத்தனை மனதிற்குள்ளும் அவனின் தன்னம்பிக்கை நிரந்தர சிம்மாசனம் போட்டுச் சாசுவதமாய் வீற்றிருக்கும்.
அவன் கற்றுத் தரும் அந்தத் தன்னம்பிக்கை உறவுகளில் தலையாய உறவாய் நம்மோடு உறவாடி எட்டமுடியாததை எட்ட வைக்கும். சோர்ந்து தளர்ந்துபோகையில் ஊட்டச்சக்தியாக இயங்கி அதனைத் துரத்தும். சோம்பலாகிறபோது சுறுசுறுப்பாக்கும். வாழ்வின் சூட்சுமம் புரிய வைத்து முன்னோக்கிய சிந்தனை விதைக்கும்.
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.