இவர் சங்கீத்த் திருவையாறுக்கு அருகில் உள்ள கல்யாணபுரத்தில் பிறந்தவர். வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும் புலமை பெற்ற திரு. எஸ்.டி. சீனிவாசாச்சாரியாரின் மகள் என்பதால் இவரது எழுத்துத் திறமைக்கு அடித்தளமாக அமைந்தது. கணவர் பார்த்தசாரதியும், குழந்தைகளும் காட்டிய உற்சாகமும், பாராட்டும் இவரை 100 கதைகளுக்கு மேல் எழுத வைத்தன. இவரது முதல் கதை 1967ல் தினமணி கதிரில் வெளிவத்தது. தினமணி கதிர், மித்திரன், குமுதம், தீபம், மங்கை, மங்கையர் மலர், கல்கி, கலைமகள், அமுதசுரபி, கணையாழி போன்ற வார, மாத இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்தன.
விகடன் நாவல் போட்டியில் இவரது “பெண்” நாவல் இரண்டாம் பரிசு பெற்றது. கண்தானம் பற்றி பிரபலப்படுத்த குமுதம் இதழும், சங்கர நேத்ராலயாவும் இணந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. சாதாரண குடும்பத் தலைவியாக இருந்த இவரது பார்வையில் படாத விஷயங்களே இல்லை எனலாம். ஆரவாரமோ, அரசியல் கலப்போ இல்லாத இவரது கதைகள் யதார்த்தமாக இருக்கும். இவரது கதாபாத்திரங்களை நாமும் என்றோ, எங்கோ, எப்போதோ சந்தித்திருப்போம் அல்லது சந்திப்போம். இக்கதைகளின் மூலம் அவர் வாழ்கிறார் என்ற நினைவுடன் உங்களுக்கு இந்த மின்அணு கதைகளை வழங்குகிறோம்.